தமிழ்
அவன் வருவானா…?
“நாம் செய்யப்போகும் காரியம் சரியா? தவறா? என்று தெரியவில்லை! ஆனால் அது இந்த இராஜ்ஜியத்திற்கு நல்லதாகத்தான் இருக்கப்போகிறது! “ஆமாம் அதுவும் சரிதான், இருப்பினும் அதன் தீவிரத்தையும், கடினத்தையும் நீ நன்கறிவாய் என்று நம்புகிறேன், சதுரா” இவ்வாறு இவர்கள் உரையாடிக் கொண்டிருக்க,, அவ்வறையின் கதவு தட்டப்படுகிறது. அப்போது, தாழிட்ட கதவைச் சதுரன் திறந்து பார்க்கையில், “வணக்கம் சதுரரே! இடையூறுக்கு மன்னியுங்கள். வேள்விச்சனின் சோழ தேசம் நோக்கிய பயணத்திற்கு, அனைத்தும் தயாராகிய நிலையில் அவரை எதிர்நோக்கிக் காத்திருக்கின்றன, ஏற்கனவே சற்று கால தாமதமாகியும் உள்ளது” என்றான் அங்குவந்த காவலன். “சரி, சந்திக்க வேண்டிய இடத்தில், இனி சந்திப்போம் சதுரா! நான் வருகிறேன்”என்று கூறியபடி சதுரனை நோக்கிய அவன் பார்வை, தங்களால் செய்யப்போகும் செயலின் தீவிரத்தை ஒளிர்விட்டது. பின்னர் அவ்விடம் விட்டு சற்று வேகமாக நடந்து, புரவியின் மீதேறி அமர்ந்தபடி“கவனம்” என்று கூறி, முத்தூர் துறைமுகம் நோக்கிப் புறப்பட்டான், வேள்விச்சன்.
இரவும் பகலும் ஒன்றுபோலத்தோன்றும் அம் மாநகரின் இரவு சந்தைகளில், பொன், பொருள், அணிமணிகள் என அத்துணையையும் வாங்கவும் விற்கவும் அலைமோதும் மக்கள் வெள்ளத்திற்கும், கடல் கடந்து வந்த அயல் நாட்டவரின் கடல்வணிகத்திற்கும் மையமாக அமைந்ததுதான், இந்த முத்தூர் துறைமுகம். இங்கு விண்ணின் விண்மீன்களை அள்ளி மண்ணில் குவித்தாற் போல, குவியல் குவியலாய் கிடக்கும் முத்துக்கள், நிலவின் ஒளியில் ஜொலித்துக்கொண்டிருந்தன. “இந்த தூங்கா நகரத்திற்குத்தான் எத்துணை சிறப்பு! அதுவும் இந்தப் பாண்டிய முத்துக்களுக்கு” என்று வேள்விச்சன் வியந்து பார்த்திருக்க “ஆமாம் விச்சரே! இருக்காமல் எப்படி? இருப்பினும் இது உமக்குப் பெரிய ஆச்சரியமாக இருப்பதுதான் எனக்கு மிகப்பெரும் அதிசயமாக இருக்கிறது” என்ற குரல் அருகிலிருந்து ஒலித்தது கண்டு வலப்புறம் திரும்பினான். அது வேறுயாருமில்லை சோழ வணிகன் மகிழன். இருவரும் இணைந்து கடலை நோக்கி படகில் சென்று கொண்டிருந்தனர். நெடுந்தொலைவில் அந்த நீலப்பெருங்கடலில் மிதக்கும் மாமதில் போன்று ஓர் இராட்சத உருவம், அதற்குத் தான் எத்துணை அலங்கரிப்பு! பாய்மரத்தைத் திசை திருப்பி, அதைச் சரியாக செலுத்துவதற்கும், வேலைத்தொழில் செய்பவர்களோடு மொத்தம் 800க்கும் மேற்பட்ட ஆட்களைக் கொண்ட ஒரு குறும்படையும், வானுயர்ந்த கொடியில் அரிமா இலட்சினையும், கண்டதும் இது ஓர் வணிகம் சார்ந்த கப்பல் என்று சொல்லுமாறு, செந்தூரான் துணை என்ற வாசகம் பொறிக்கப்பட்டிருந்த அம் மாமதில் வேறெதுவும் இல்லை, அதுதான் வணிகன் வேள்விச்சனின் தெற்கு வணிகக்கப்பல். ஆம் வேள்விச்சன் எனும் இவன், கடல்கடந்து சென்று உலகை பவனி வருகின்ற ஓர் வணிகனாவான். இது போன்று திசைக்கொன்றாக இவனது கப்பல்களின் எண்ணிக்கை நான்கு. ஆனால் வேள்விச்சனைத்தவிர இதைப்பற்றி நன்கறிந்தவர் வேறு யாரும் இல்லை. தெற்கில் கபடாபுரமும், வடக்கில் விக்ஷர்ன பட்டினத்தோடு, தொன்மை மிக்க காவிரிபுகும் பட்டினமும், மேற்கில் சேர வேந்தின் கொற்கை துறைமுகமும், கிழக்கில் பலத்தீவுத்துறைமுகங்கள் என பல்வேறு இடங்களில் இவனது கப்பல்கள் உலாவிவந்திருந்தன. வேற்று நாட்டவரின் கப்பல்கள் இதன் முன் சிறியதெனத் தோன்றின. இருப்பினும் சில வணிகக் குழுமங்கள் இவனுக்குச் சளைத்தவையாக இல்லை. ஆயினும் அரசுகள் யாவற்றிடமும் கொடியுரிமைப்பெற்று, வணிகத்தில் முழு சுதந்திரம் கொண்டிருந்ததுதான் இவனது அகிலம் போற்றும் சிறப்பென இருந்தது. மகிழனுடன் வேள்விச்சன் அம் மாபெரும் கப்பலில் ஏறி, வடக்கு நோக்கி கப்பலை செலுத்த ஆணையிடுகிறான். ஆணைக்கிணங்க அடுத்த கனமே கப்பல் வெகுண்டெழுகிறது.
மறுபுறம் கபடாபுரத்தின் அரண்மனையில், ஷக்தரம் நோக்கிப் பயணிக்க, தன்னை தயார்படுத்திக் கொண்டிருக்கிறார் சதுரன். பின் 350 படைவீரர்களும், முத்துத்தேர்களுமாக விரிசடை பாண்டிய தேசத்திலிருந்து வடக்கு நோக்கி, மேருமலைத் தொடர்ச்சிகளைக் கடந்து, ஷக்தரம் நோக்கிப் பயணிக்கிறார். ஆயுத்த என்ற இடத்திலிருந்து ஷக்தரா இராஜ்ஜியம் துவங்குகிறது. இந்நாடு இராஜன் ஷக்தரனுடையது. இது அகன்று விரிந்த தேசமாக காணப்பட்டது. குறிப்பிட்டுச் சொல்லப்போனால் அது சேர, சோழ, பாண்டிய இராஜ்ஜியங்களுக்கு மையமாகவே இருந்தது. இராஜன் சுயாட்சி செய்யும் உரிமையில் இருந்தாலும் அவன் முடியுடை வேந்தர்களுள் முத்துடைத்தோர், பாண்டியருக்குக் கீழ்தான் ஆட்சி செலுத்தி வந்திருந்தான். இந்நாடு செல்வச் செழிப்பில் மற்ற நாடுகளுக்கு இணையாகவும், போர்ப்படைகளில் அவர்களைப் போன்றே, அனைத்து அணிகளும், மற்ற படை அமைப்புகளும் கொண்டு, தென்னவர்களுக்கு ஈடாக வலிமையும், பெருமையும் பெற்றிருந்தது. இதனால்தான் என்னவோ தன்னை மீறி, எப்படையையும் வீழ்த்தும் தைரியத்தையும் கர்வத்தையும் தன் தலைக்கு மேல் மணிமுடியாக்கி இருந்தான் இராஜன் ஷக்தரன். இங்கு ஆயக்கலைகள் அத்துணையும் வெகுச் சிறப்புற்று, குருகுலங்கள் தழைத்தோங்கி அவை எண்ணிக்கையற்றுக் காணப்பட்டது. அதனால் தேசங்கள் யாவற்றிலுமிருந்து மக்கள் இங்கு வந்து குருகுல வாசம் செய்தனர். இதுவே இந்தப் பூமியை ஞானதேசம் என்ற அடைமொழிக்கு ஏற்புடையதாக்கியது. மற்றவர் இந்த நாட்டின் கட்டிடக்கலையை கண்டு மகிழ்ந்து, அதன் வல்லுநர்களை எண்ணி வியக்கும் அளவுக்கு, இங்குக் காணும் கட்டிடங்கள் பற்பல நுணுக்கங்களுடன் தோன்றி நின்றன. ஒழுங்கான சீரமைப்பில் அமைந்திருந்த வீதிகள் ஒவ்வொன்றும் நீண்டவையாக அமையப்பெற்றிருந்தன. இந்த நீண்ட வீதிகள் ஒரு சக்கரத்தின் ஆரங்களாக அமைக்கப்பட்டிருந்தன. சக்கரத்தின் விளிம்பில் மதில்கள் அதன் மையத்தைக் காத்து நின்றன. இது மூன்றடுக்கு பாதுகாப்பில் நான்கு திசையையும் கவனித்து அரண் செய்தது. இந்தச் சுழலா சக்கரத்தின் அச்சாணிதான் இராஜன் ஷக்தரனின் கோட்டை. அரசனவன் ஆட்சிதனை திறம்பட செய்தான். அதனால் நாட்டு மாந்தர் நிம்மதியில் திளைத்திருந்தனர். மன்னன் மன நிறைவு கொண்டிருந்தான். இந்த வீதிகளில்தான் சதுரனின் முத்துத்தேர்கள் விரைந்தன. அவ்வழியில், பார்த்த விழி பார்த்தபடி, பார்வை மாறாது, சொக்கி நிற்க மயக்கம் தரும் பருவ நங்கையர்களின் உலாவலும், வாசலில் நீர் தெளித்து வண்ணக்கோலங்கள் இடப்பட்டு, வீதிகள் யாவும் விழாக்கோலம் பூண்டு காணப்பட்ட அந்த அழகு, அயலாரை அசந்து போகும்படி செய்திருந்தது. இதைக்கண்டு சற்றே புன்சிரிப்பு கொண்ட சதுரன், விரைவாகத் தேரை செலுத்தி அரண்மணைக்கு வந்து சேர்ந்தான்.
அரண்மணையில் உள்ள ஓரிடத்தில், இராட்சத கதவுகள் இரண்டு திறக்கப்பட்டன. அகன்ற, ஒரு பிரம்மாண்ட தோற்றம், அந்த அறைக்குள் வேறு தேசத்து மன்னர்களும், பட்டத்து இளவரசர்களும், சில முக்கிய பிரதிநிதிகளுமாக, ஆன்றோர் சான்றோர் பெருமக்களோடு, அவ்விடம் நிரம்பப்பெற்றிருந்தது கண்டு, சதுரனின் ஒரு புருவம் தானாக உயர்ந்து வியந்த, தன் வியப்பை, தனக்கே உரித்தான பாணியில் ஒருவரும் அறியாது, அக்கனமே அதை மறைத்தான். அவ்விடம்தான் ஷக்தரனின் மகள் இளமஞ்சுவின் சுயம்வரம் நடக்கும் அவை. ஆம் அந்தப் பேரவைக்குள் தான் நுழைந்தான் சதுரன். நுழைவாயிலுக்கு எதிராக அமைக்கப்பட்டிருந்த ஆசனத்தில், கம்பீரமாக அமர்ந்திருந்தவனின் இடது புறம், மங்கையொருவளும் அமர்ந்திருந்த அந்தத் தோற்றமே சொன்னது, அதுதான் இராஜன் ஷக்தரன் என்றும், அருகில் இருந்தவர் மகாராணியார் என்றும். அரியனையே அவன் நாட்டின் மிகச்சரியான மையம். அதுவே அச்சாணியும் கூட. அந்தச் சிம்மாசனத்தின் நேர் எதிரில், முதல் தளத்தில் அத்தாணி மண்டபம் அமைக்கப்பட்டிருந்தது. உள்ளே நுழைந்த அவன், அவையோர் அனைவரையும் விட, மிக இளையவனாகத் தோன்ற, அரியணையில் வீற்றிருந்தவன் சற்றே தலை சாய்த்து, முட்டியில் முழங்கையை நிறுத்தி, அதைத் தாடைக்கு முட்டுக்கொடுத்து, விரலசைவில், தன் அமைச்சனிடம் ஏதோ ஒன்றை வினாவினான். பின் அங்கு வந்த இளைஞன் சதுரனிடம் “தாம் இவ்விடம் அறிந்துதான் வந்தீரோ” என்றான். மறு கனமே சதுரனும் “ஆம்! வைகை என்றோர் நதியின் மடியினிடத்து கொஞ்சி மகிழும் ராஜ்ஜியம் ஒன்றும், அதன் மகாராஜர் இராஜ ஷக்தரன் என்றும், அவர் தமிழ் மண்ணில் மூவேந்தருக்கும் இணையானவர் என்றும், அது தாம்தான் என்றும், யமக்கு அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது அரசே! மகாரஜர் மற்றும் மகாராணியையும் பணிந்து, அவை சேர்ந்தோர் அனைவரையும் வணங்குகிறேன் என்றான் ” இவ்வார்த்தைகள் கேட்ட இராஜன், புன்னகையில் கர்ஜித்ததையும் கடைக்கண்ணில் கண்டுகொண்ட சதுரன், மேலும்”தென்னுலகில் முத்துக்கென்று ஓர் சிறப்பு, முத்துக்கு மட்டுமன்றி எதிர்வரும் இப்படைக்கண்டு, எப்படையும் நடு நடுங்கும் ஐம்படை சிறப்பும், அதனோடு மிருகங்கள் கொண்ட குறும்படையும் கொண்டு, 49 நாடுகளையும் ஒரே தலைமையின் கீழ் தென்புலத்தை ஆட்சி செய்து, அகத்தியன் முதற்கொண்டு அநேக புலவர்களோடு, கொடுங்கடல் கொன்றாலும், சங்கம் இரண்டும் செய்து, என்றுமே மொழிக்கு முதவல்வனாக இருக்கும் தென்னவரையும், அவர் வழி வந்தவனும், கபடாபுரம் எனும் அந்நகரை தலைநகராக்கி தென்புலம் ஆள்வோனுமாகிய, வேந்தன் கடம்ப பாண்டியனையும், அவர் பெயரன் இரண்டாம் யுவனையும் யாவரும் அறிவீர்கள் என யான் நம்பிக்கைக்கொள்கிறேன்! எம் அரசனின் ஆணைக்கிணங்க இவ்வவையோன் உம் அழைப்பிற்கிணங்க, யாம் இரண்டாம் யுவனின் பிரதிநிதியாக இங்குப் பிரவேசித்துள்ளோம்” என்று முகவரித் தந்து, மீன் சின்னம் பொறித்த நீல வண்ணக்கொடியை உயர்த்திப் பிடித்தான். அவையோ சற்று சலசலத்துக் கொண்டது, அடுத்த கனமே! அவன் அரசனின் அரியாசனத்திற்கு கீழமைந்த, மன்னர்களுக்கான ஆசனத்தில் அமர்த்தப்பட்டான். அதுவரை அவையோரை நோக்கியிருந்த அவனது பார்வை சிறிது தட்டுத் தடுமாறி அத்தாணிமண்டபத்தில் விழுந்தது.
அங்கு, தேன்பருகி மகரந்தம் பூசிக்கொள்ளும் வண்டுகள் எல்லாம் வந்து, ஒரு மலரை வட்டமிடும் அந்தப் பூ மலரைப்போல, ஒரு மாதுவின் தோற்றம்! வெண்புஷ்பங்கள் கொண்டு மங்கையவள் கூந்தல் அலங்கரித்துக் காணும் ஆடவர் கண் மயங்கும் ஒப்பனையில், காணப்பட்டாள் அந்த கார்க்குழலி! பார்ததுமே கண்டுகொண்டான், அவள்தான் இளவரசி இளமஞ்சு என்று. சுயம்வரம் வந்த ஆடவரின் எண்ணமெலாம், அவள் பெண்ணழகைக் காண ஏங்கி இருக்க, அவள் நினைவெல்லாம் வேறெங்கோ அலை பாய்ந்திருந்தது. பலுக்கல் படர்ந்த பூங்கொடிபோல் தூணில் சாய்ந்திருந்தாள் தன்னை சரமாறியாக தாக்கும் குழப்பத்தோடு! மையிட்ட அவள் கயல்விழிகள், பொய்யற்று சொன்னது, தான் விரும்பா அம் மணக்கோலத்தை! தெளிர் நீரில் பட்டுத் தெறிக்கும் வெண்ணிலவின் வெள்ளொளிபோல, ஜாடையாய் அவள் முகம் சொன்னது, தன்னை விடுவிக்க அவன் வருவானா எனும் ஏக்கத்தை…!
"வடுக நாடு"
தெற்கிலிருந்து வடக்கு நோக்கி விரைந்த, வேள்விச்சனின் கப்பல், இந்தக் காவிரி புகும் பட்டினத்தில் வந்து கரை சேர்ந்தது. வேள்விச்சனால் பிறப்பிக்கப்பட்ட கட்டளையால், வணிகன் மகிழன் சோழ அவை நோக்கி தூதாக செலுத்தப்படுகிறான். வேள்விச்சனின் அடுத்த ஆணை, பொருட்கள் சென்று சேர வேண்டிய இடத்திற்கு சென்று சேரவும், இனி ஏற்றுமதி செய்யவேண்டிய பொருட்களை ஏற்றுமதி செய்யவும், இவையனைத்தையும் பற்றிய தகவல்கள் யாவும், வணிகர் மையத்தில் சேர்க்கப்பட வேண்டும், என்று மற்றவர்களைத் துரிதமாக இயக்குகிறது. அதன் பின் வேள்விச்சனின் பயணம், வடுகநாடு நோக்கி அமைகிறது. தனது குறும்படையுடன், சைலம் என்ற தேசத்தின் வழியாக, சேரவர் ஆயன் (அரண்) எனும் அம்மலைத் தொடர் கடந்து, வடுக ராஜ்ஜியத்தின் எல்லையைத் தொடுகிறான். அவன் அவ்விடம் சேரும் முன்னரே வடுக தேச தென்றல் தன்னை வருடுவதை, அவன் மேனி உணர்கிறது.
பசுமை போர்வை போர்த்திய வடுக ராஜ்ஜியம், இயற்கையோடு இயைந்த ஓர் அழகு. அதன் தொன்மை, நெடுங்காலத்து சேர்ந்தது இல்லையெனினும், அங்கு வாழ்ந்த மாந்தர்கள், குறைவற்ற வாழ்வு வாழ்ந்திருந்தனர். விண்ணைத்தொடும் மாமலைகளும், அங்கு மனந்தொடும் மலைச்சாரலுமாக, எண்ணத்திற்குச் சற்று இதமளிக்குமாறு இருந்தது. எழில் கொஞ்சும் இயற்கைதனை எழுதாதார் யாருமில்லை! என்று யோசித்தவனாக, வேள்விச்சன் காணக்கிடைத்ததையெல்லாம் கண்டு களித்திருந்தான். பயணத்தை நெடுந்தொலைவு தொடர்ந்தான். என்றுமே மனமயங்கும் விச்சனவன், போகும் வழியில், அன்று மதிமயங்கி நின்றிருந்தான். அவன் மனம் பறிபோனதோ ஓர் பேரெழில் பெண்பாவையிடம். அவள் களைப்பால் அயர்ந்திருந்தாள். மரங்கள் இலைகள் கொண்டு, கதிரொளி இம்மண்ணில் விழுவதை இடைமறித்தாலும், அந்த மாலைப்பொழுதில், காட்டைத்துளைத்துக்கொண்டு அவ்வொளி மங்கையவள் மேல் விழுந்தது. காணகக்குயிலின் காணத்தினோடு, அப்பெண்கவியின் காட்சியால், காற்றோடு காற்றாக மிதந்தவன், காரிகையவள் கண்ணத்தில், கதிரொளிப் பட்டு, சற்று கண்கள் சுருக்கி, பெண்ணவள் முகம் சுழிக்கக்கண்டான். இதைக்கண்டு உடல் சிலிர்த்து, ஓர் பெருமூச்சோடு, என்னென்னவோ எண்ணிமுடித்த இவனுள், அலர்ந்த இமைக்கா நொடிகள் அதுவே ஆகும். மெல்ல மெல்ல நெருங்கி, புரவியின் துணைகொண்டு அவளுக்கு நிழல் நிறுத்தி, ஒளியினை வழிமறைக்க முயன்றான். யாரோ அருகில் வருவதை உணர்ந்தவள், சற்றே சுதாரித்துக்கொண்டாள். சட்டென்று திரும்பி, கட்டுடல் மேனியில் கலைஞனும் இல்லாமல், வீரனும் இல்லாமல், இளைஞன் ஒருவன் தன்னை நெருங்கி வருவதைக்கண்டு, சிறு கலக்கம் கொண்டவள், அவனுக்குப் பின்னால் படைவீரர்களும் அணிவகுத்திருந்தது பார்த்து சற்று அச்சமும் தொடுத்திருந்தவள், தன் விழி இரண்டில் அவனை ஒழித்து வைத்தாள். அவளின் தயக்கம் உணர்ந்தவன், தன்னைமறந்து, தான் மயங்கிய நிலை மறைத்து, பயணத்தைத் தொடர்ந்தான். இதுவரை குயிலின் கீதமும், நீரின் சலனமும் கேட்டு வந்த அவன் செவிகளில், மானுடர் சலசலப்பு விழுந்தது. இது நடந்தது எல்லாம் ஓர் நகரத்தின் எல்லைத்துவக்கத்தில் தான். ஆமாம்! இதுதான் அந்நாட்டின் எல்லைத்துவக்கம். இதையும் அவன் நன்கு அறிவான். அங்கிருந்த சாலைகளுக்குளேதான், விருட்டென்று விரைந்தது அவனது பரி படை. சுற்றிலும் மலைகளாக, மத்தியில் அமைந்திருந்த கோட்டைக்கு, அம்மலைகளே அரணும் அணிகலனுமாகத் தோன்றியது.
அந்த அரண்மனையின் பிரதான வழியைத் தவிர்த்து, அமைச்சர்களும் முக்கிய பிரதிநிதிகளும் செல்லும் வழியாகக் கோட்டையினுள் நுழைந்தான். உள்ளிருந்த மந்திரிகளுள் சிலர் விரைந்து வந்து வரவேற்று, அவனை உபசரிக்க, பணியாளர்களுக்கும், சேவகர்களுக்கும், ஆணையிட்ட கனமே அவர்கள் விரைந்தனர். அரண்மனையில், ஒரு அறையில் ஓய்வு கொண்டிருந்த அவனிடம் “ வணக்கம் வேள்விச்சரே! அரசியுடனான சந்திப்பிற்காக கலந்தாய்வு மண்டபம் நோக்கி, தாங்கள் தற்போது செல்லலாம்” என்று சேவகனிடமிருந்து தகவல் வந்ததும், அவ்விடம் நோக்கிப் புறப்பட்டான் வேள்விச்சன். அவையில் காத்திருந்த அடுத்த சில நாழிகைகளில் “இராணி அவை நோக்கி வருகிறார்” என்னும் பேரறிவிப்போடு, முன்னும் பின்னும் சேவகர் கூட்டம் சூழ்ந்து, கம்பீர நடைபோட்டு, உடைவாளும் உடையவளாக, பிதிநிதிகளின் கலந்தாய்வு மண்டபத்தில் பிரவேசிக்கிறாள் வடுகநாடாளும் அரசி, இராணி நற்சோனை! அதன் பின், தான் அவ்விடம் வந்ததன் காரணமும், நடக்க விருக்கும் நிகழ்வுகளும், தங்களால் செய்யப்படவேண்டிய காரியமும், தெள்ளத்தெளிவாக விளக்குகிறான் வேள்விச்சன். குழப்பமும் பதற்றமும் கலந்து, எதற்கு இசைவதென்றே தெரியாமல், தடுமாற்றத்தில் அவன் முகம் நோக்குகிறாள் அரசி நற்சோனை! இதைச்சற்று கவனித்தவனாக எப்படியாவது தனக்கு சாதகமான தீர்வையே பெற வேண்டும் என்ற உறுதியில், அரசியிடம் “அரசியாரின் உத்தரவு இதற்குச் சாதகமாக அமையும் என்று நம்புகிறேன்! எனது எண்ணம் சரிதானே?” என்று வினாவினான் வணிகன் வேள்விச்சன். மறுகனம் அரசி நற்சோனை “இந்தத் தருணம்தான் என் வாழ்விலேயே எதைச் சார்ந்து முடிவெடுப்பது என்று ஆழ்ந்த குழப்பத்தில் என்னை ஆழ்த்துகிறது… இருபத்து ஐந்து வருடங்களுக்கும் முன்னர், வீரக்கணைகள் வந்து மார்பைப் பிளந்து, செந்நீர் சிதற, உயிர் ஊசலாடும் போதும், தம் மணவாளனின் பிராணனை கையில் பிடித்துக்கொள்ள முடியாமல், மணாளனையும் இழந்து, மக்களையும் இழந்து, களத்தில் விதவைகோலம் பூண்டு நின்ற மங்கைக் கூட்டத்தில், நானும் ஒருவளாக தோன்றி, இனி இவ்வாழ்க்கையென்னும் இந்த ஒருவழிப்பாதையில்தான் என் பயணம் என்று நான் உணர்ந்து, அவ்வாழ்க்கையை தொடர்ந்த தருணத்தில், நிமலினி என் மகளாகிய நினைவு என்முன் வந்து போகின்றது…” என்று நற்சோனை வேள்விச்சனிடத்தில் கூறும்போது, கனத்த அவள் விழிகள் கண்ணீர் சுமந்தன.
பின்னர் “என்றோ ஒருநாள்! என்று, நான் எதிர்நோக்கிய இந்த வினா, உன் வழியில், இவ்விடத்தில் இன்று ஒலிக்கிறது வேள்விச்சா! அது போகட்டும், இனி நடக்கவிருக்கும் சம்பவங்களுக்கு, நிமலினி இசைவாள் என்பது என்ன நிச்சயம்? காரணம், இதுவரை அவளே என் மகள்! நானே அவள் தாய்! அது மட்டுமல்லாது இப்பொழுதுவரை இதை எதையும் அவள் அறியாதவளாவாள். அப்படியே அறிந்தாலும் உடனடியாக அவள் ஒப்புதல் தருவாள் என்பது, என்னைப் பொருத்தவரை முற்றிலும் அசாத்தியம். கடமை என்று நான் சம்மதித்தாலும், என் தாய்மை இதை ஏற்கப் போவதில்லை. அதைச் சமாளிக்கும் உபயமும் நான் அறியேன்” என்று அவள் கூற, அதற்கு வேள்விச்சன் “மாகாரணியார் அவர்களே! எது நடந்தாலும் நடக்காவிடிலும் தாங்களே நிமலினியின் தாய் என்பதும், அவள்தான் தங்களின் மகள் என்பதும் யாராலும் மாற்றிட முடியாத உண்மை… மங்கையாகப் பிறந்தவள் மறுவீடு செல்வது முறை! அதுவே தமிழ் மறையும் ஆகும். ஆக, நிலமையை சரிக்கட்ட இதை விட வேறு வழி எதுவும் இல்லை என்பதும் சத்தியம். இராணியவர்கள் எதையும் மறந்து விடக்கூடாது என்பதற்காக, ஒன்றை மட்டும் நினைவுக்குக் கொணர்கிறேன். அதே இருபத்து ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர், சுப்பய்யன் என்பவரின் நாமம் தங்கள் செவிகளில் விழும்போது, அவர் தங்களிடம் பெற்ற ஒரு ஒப்பற்ற பரிசும் தங்கள் விழிமுன் வரும்”, என்று வேள்விச்சன் கூறியபடி நற்சோனை முகம் நோக்குகையில், பசுவினை காண என்னும் கன்று, ஒரு பக்கம் இருந்து, தன் தாயை அழைக்கும் போது, மறுபக்கமிருந்து அக்கன்றினை நோக்கிக் கதறும் (ஒலி மரபு) அந்தப் பசுவினைப்போல அவளது தாய்மையின் ஏக்கமும், எதிர்பார்க்கும் தாகமும் தாங்கி, ஏதோ ஒரு எண்ணத்தில், தன்னை முழுமையாக நுழைத்திருந்தவளை, அரசியாரே நான் சொல்வது சரிதானே! என்று கூறி சுயநினைவுக்குக் கொண்டுவந்தான்.
கனவிலிருந்து களைந்தவள், சேவகரை அழைத்து தூதினை ஆணையாக, இளவரசி நிமலினிக்கு ஏவினாள்.
"அரசியார் மற்றும் வேள்விச்சனுடனான, அவசர சந்திப்பிற்கு கலந்தாய்வு மண்டபம் வருக.
இது அறிவிப்பு இல்லை! கட்டாய அழைப்பு!"
என்று, இளவரசியின் அறை நோக்கிய, அந்த துண்டுச்செய்தி அமைக்கப்பட்டிருந்தது...
"அரசியார் மற்றும் வேள்விச்சனுடனான, அவசர சந்திப்பிற்கு கலந்தாய்வு மண்டபம் வருக.
இது அறிவிப்பு இல்லை! கட்டாய அழைப்பு!"
என்று, இளவரசியின் அறை நோக்கிய, அந்த துண்டுச்செய்தி அமைக்கப்பட்டிருந்தது...
“கவியின் மடியில் தெளிவில் மயக்கம்…”
“சக்தர நாடு, இது ஓர் பேரழகு என்பார்
சக்தரன் அவை, இது ஓர் பிரமாண்டம் என்பார்” – காரணம்
அரசன், பொது அவை ஒன்றைக் கூட்டுகிறான் என்றால் நாடே கூடியிருக்கும். ஏட்டோடும் பாட்டோடும் அந்நாட்டுப் புலவர்கள் இதைப் புகழாமல் இருந்ததே இல்லை. ஆனால் அது பாண்டிய நாடாகவே பாடப்பெற்றது. போற்றப் பெற்றது. அரசன், அமைச்சர்கள், அருமைச்சான்றோர்கள், புலவர்பெருமக்கள், நடுநிலை வகிக்கும் நாட்டு மாந்தர்களோடு அன்றைய நாள் நாடு, ஆர்ப்பரிக்கும் தென்கடல் அலை போல சூழப்பெற்றிருந்தது. முதல் நாள் அரண்மனை அவைக்குள் பட்டத்து இளவரசர்களும், இராஜ குமாரர்களும் அவையோருக்கு தங்களை அறிமுகப்படுத்திக்கொண்டனர். இந்நாட்டின் இன்னுமொரு சிறப்பு விருந்தினர் மண்டபம். இது ரம்மியமான வேலைப்பாடுகளுடன், மிகவும் அழகாகக் கட்டமைக்கப்பட்டிருந்தது. இங்குதான் சதுரனுக்கும், மற்றவர்களைப் போல் அன்றைய இரவை கழிக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
சிந்தையில் பல யோசனைகளோடு தன் சிந்தனைக் கடலில் மூழ்கியவாறு, தான் வைத்திருந்த ஓலைச்சுவடிகளை, கையிலே மாற்றி மாற்றி அறையின் குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டிருந்தான். அவனது அன்றைய நாளில் ஆதவன் மறையவே இல்லை. மறுநாள் காலைப் பொழுது வரும் வரை, அவன் விழிகள் இமைத்தது இமைத்தவாறே உறங்காது கிடந்தன.
அடுத்தநாள் அரண்மனைக்கு எதிரே ஓரிரு காத தூரத்தில் மிகப்பெரும் மேடையோடு கூடிய களம் ஒன்று கட்டமைக்கப்பட்டிருந்தது. அதைச் சுற்றியே அரசவையோரும், மற்றவர்களும், மக்களும் சூழ்ந்திருந்தனர். “வில்லோ சொல்லோ எதுவானாலும் சரி! அதில் எதுவொன்றை, என் மகளின் மனம் விரும்புகிறதோ, அது இன்று இவ்விடத்தில் மகத்துவம் பெரும்”என்ற அரசனின் வாக்கு அன்றைய நாயகர்களின் மனதில் இளவரசியை மனம் முடிக்க வேண்டும் என்ற ஆவலைத் தூண்டிவிட்டது. அன்று அரச சுயம்வர நிகழ்ச்சிக்கு அழைக்கப்பட்டிருந்தோரின் தேர்கள் களத்தின் முன் அணிவகுத்திருந்த தோற்றம் ஒரு முற்றுகைப் போலே காட்சிகொடுத்தது.
அவைக்களத்தை சூழ்ந்திருந்தவரின் முன், மலர்களைச் சூடிய மாது அவள், ராஜ வரவேற்போடும் “இளவரசி வருகிறார்” என்னும் அறிவிப்போடும் முரசொலி முழங்க,இரதத்திலிருந்து கீழிறங்கி, பாதம் பெயர்க்கும் சத்தம் கூட இல்லாமல் அரசர், அரசியார் மற்றும் இளவரசிக்காக அமைக்கப்பட்டிருந்த மேடையின் படிகளில் மெதுவாக ஏறி தனது இருக்கையின் முன் நின்று மக்களையும் மற்றவர்களையும் பார்த்து, தனது இருகரம் கூப்பி பொய்யான தன் புன்னகையோடு அவையோரை வணங்கி தன்னிடம் சாருகிறாள் சக்தரநாட்டு இளவரசி இளமஞ்சு. துவக்கத்திலேயே, நாடெங்கும், நீல வண்ணம் நிறமேறிய சக்கரம் பொறித்த கொடி, ஒரே நேரத்தில் பறக்கவிடப்பட்டது. இது விளக்குவதாவது, சுயம்வர நிகழ்ச்சி இனிதே துவங்கிவிட்டது, இனி சுயம்வர போட்டியாளராக அவையின் உள்ளே எவரும் நுழைய முடியாது என்பதாகும்.
முரசொலி முழங்கியதும், வரிசையில் முதலாவதாக அமர்ந்திருந்தவன் முத்துரதனின் மகன் இளந்திரையன். அவன் தனது திடத்தைக் காட்டும் பொருட்டு தனது உடைவாளை எடுத்துச் சுழற்றினான். அவனது மின்னல் வேகச் சுழற்சி பார்ப்போர் அனைவரையும் பரவசமூட்ட, உற்சாக குரலெழுப்பிக் கைதட்டி ரசிக்க வைத்தது. தான் வென்ற போர்களையும், தன்னிடம் தோற்ற எதிரிகளைத் தான் கழு மரத்தில் ஏற்றியதையும் பட்டியலிட்டு, கோன்குறுவழுதி எனும் மன்னன் எவராலும் தோற்கடிக்கப்படாதவன், ஆனால் அவனோ முதற்போரில் இளந்திரையனிடம் தோற்று, அங்கமெங்கும் நாராசத்தால் விழுப்புண்கள் வாங்கி, பின் மீண்டும் மூண்ட இரண்டாம் போரில் திரும்பவும் தோல்விகண்டு இளந்திரையன் நாராசத்தை அவன் காதிலே பாய்ச்சி கடுமையாகவும், மிகக் கொடூரமாகவும் கொன்றதையும் மேற்கோள் காட்டி கர்வப்பட்டுக்கொண்டான். இவன் சர்வமும் போற்றக்கூடிய வீரன்தான். ஆயினும், குணமில்லாதவன் மற்றும் நற்பண்பில்லாதவன் என்பது அவன் பேச்சிலே வெளிப்பட்டது.
இளந்திரையனுக்கு அடுத்தடுத்து ஒருவர்பின் ஒருவராக வாள், வேல், வில்லம்போடும், சொல்லோடும் அவையை மிரளச்செய்தனர். அவ்வரிசையில், “வெண்பா”வில் பாட்டமைத்து அதுவரை கேளாத பாரத பெருங்கவியாக ஒருவன் போற்றப்பட்டான். அவனோ சேர நாட்டின் ஒரு அங்கத்தை ஆள்பவன். அவன் பேர் கோப்பெருங்கோன்குட்டுவன் என்பதாகும். இவனது இடத்தில் கள்வர் கொட்டம் அடக்கப்பட்டு, அவர்கள் விரட்டியடிக்கப்பட்டதுடன் எஞ்சியோர் நாடுகடத்தப்பட்டனர். அதுவே அவனது வரலாறு கண்ட பெரும் சிறப்பு ஆகும்.
பின்னர் இறுதியிலும் இல்லாமல் முதலிலும் இல்லாமல் இடையிலே அவைக்கு மத்தியில் தோன்றினான் சதுரன். அதுவரை அவன் சிந்தை சிந்தித்துக் கொண்டிருந்தது என்ன தெரியுமா? எதைச் செய்தால் இவ்விடத்தில் தான் வந்த காரியத்தை நடத்தி, வெற்றிகாண முடியும் என்பதாகும். அதற்கு விடை கிடைத்தது போல், சிறு புன்னகையுடன் கையில் தண்டத்தை எடுத்தான். அதில் வல்லவன் என்பது எடுத்தவன் தோரணையிலே தெரிந்தது. தண்டத்தைக் கையில் எடுத்து, தான் நின்ற இடத்திலிருந்து ஓரிரு அடிகள் பின்வாங்கி, அதை வேகமாகச் சுழற்றி, தரையிலே ஓங்கி அடித்தான். அதனால் எழுந்த அதிர்வலைகள், கொற்றவனின் தலைமேலே நின்ற வெண்கொற்றக்குடையைச் சற்று அதிர வைத்தது. அடுத்தது தனது இன்னொரு படைக்கலனை கையில் எடுத்தான். இது யாரும் சிறப்புப் பெறாத படைக்கலன். இதில் தேர்ச்சி பெற்றிருந்தாலும் இதற்காக யாரும் போற்றப்பட்டதில்லை. ஆம் அதன் பெயர்தான் திகிரி. திகிரியை எடுத்து வேகமாகச் சுழற்றி, இமை மூடி திறக்கும் முன்னரே இலக்கை குறி வைத்துத் தாக்கி, பின் மீண்டும் அதை அவன் கைப்பற்றி இடையில் சொருகினான். இதில் இவனிடத்தில் தென்பட்ட இந்த நுணுக்கமும் திறமையும், வல்லமையும் அந்த சங்கமத்தையே சற்று சிலிர்க்க வைத்தது. அதோடு மட்டுமன்றி கலன் பற்றி வித்தைகள் செய்ததோடு நில்லாமல் கவிதொடுத்து செயலாற்ற எண்ணினான். ஆக இவன் தன் இடுப்பில், தான் அணிந்திருந்த, கச்சையிலே சொருகி வைத்திருந்த,“என்னவளும் யானும்” என்னும் தலைப்பில்
அவன் குறுங்கவிதையாகப் படைத்த மடலொன்றை எடுத்தான், படித்தான், கவி பாடினான். கவி-பெண் எனும் பொருளில்,
“கவியின் மடியில் தெளிவில் மயக்கம்” என்று இரட்டுற மொழிதலாக துணைத் தலைப்பிட்டு எழுதப்பட்டிருந்த அக்கவியின் ஓரிடத்தில்….
“வைகறையின் நேரம் வைகைக்கரையின் ஓரம்
வைகையின் சாரல்!
பெண்ணிலவைக் கவியாய் சமைத்து,
வெண்ணிலவை விளக்காய் அமைத்து,
அவள் விரலைந்தும் அவன் தலை கோத,
அவள் மடி அவன் சாய்ந்திருந்தான்.
சாய்ந்திருந்த அவனோ அவள் கன்னத்தில் முத்தமிட,
சலனமற்ற அவ்-ஆறு அவள் நானத்தால் சற்றே சத்தமிட்டது.
ஊர் உறங்கும் அவ்வேளையில்-இவர்
இருவர் மட்டுமுறங்கா அந்நேரம் -அவளிடத்தில்
ஆடியில் காவிரி பெருகி வரும் அந்நாளில்
உன் கண்ணெதிரில் வந்துனைச் சேர்வேனடி
இனி அவை வந்தோன் உடன் நீ அவை கடப்பாய் என்றான்”- என்று அமைக்கப்பெற்றிருந்தது.
இவ்வரிகள் கேட்டதும் விழியிரண்டும் முழுதாய் திறந்து, வெற்று வரிகள் தன் நெஞ்சில், வேல் பாய்ச்சியது போல் பார்த்தாள். பெண்ணவளின் திகைப்பைக் கண்டவன், இதைத்தானே நானும் எதிர்பார்த்தேன் என்பது போல், புன்னகை செய்து வேண்டுமென்றே அவ்வரிகளை அவள் செவி சேரும்படி மீண்டும் மீண்டும் மும்முறை படித்தான். அதுவரை அவைக்களத்தை பாராத அவள் கயல்விழிகள் அங்கேயே நிலைபெற்றன. மெதுவாக அவள் விழியிரண்டும் இவன் பக்கம் சாய்ந்தன. இவளுக்கும் இக்கவியின் வரிகளுக்கும் ஆன சம்பந்தம் என்ன? என்பதுதான் இவளின் ஏக்கம், துக்கம், எதிர்பார்ப்போடு நாம் இதுவரை பயணித்த இக்கதையின் சாராம்சம் ஆகும். வாரீர்! இன்னும் ஒரு சுவாரசியமான எடுத்துக்காட்டு கதையொன்றும் உள்ளது,கேளீர்!
சக்தர நாட்டின் வடக்கே, கிழக்கே அல்லது வடகிழக்கே அமைந்ததுதான் சோழநாடு. இதை சக்தரநாட்டின் அண்டைநாடு என்றே சொல்லலாம். இந்த அகன்ற இத்தேசத்தை ஆள்பவன் திறம் கொண்ட சிவபக்தன். கிழக்கு கடலையே ஏரிபோல் ஆக்கி, கடலெங்கும் கப்பலை நிற்கச்செய்து, அக்கப்பலாலே கடலுக்கு கரைகாண்பித்தவன். தனது சோழாந்தியை கங்கையில் செலுத்தி, வடக்கு தெற்காக வலிமை காட்டி வாணிபம் செய்தவன். அவன் பேர்தான் மருதச்சோழன். இவனைக் கம்பலை தருவேந்தன் என்றும் அழைப்பார்கள். காரணம் தன் எதிரிகளுக்கு தன் படைபலத்தாலேயே நடுக்கம் தருபவன். மருதச்சோழனுக்கோ இரண்டு மகன்கள். மூத்தவன் சுந்தர காந்தன், இளையவன் சுந்தர செம்பியன்.
சுந்தர காந்தன் தனது இளம்பருவத்தில் கல்விக்காக சக்தரதேசத்தில் குருகுலவாசம் செய்தான். அந்நாளில் ஏற்பட்ட சந்திப்பில் அறிமுகமாகி, பின்னர் சோழர்களின் பெரு விழாவாம் ஆடிப்பெருக்கு எனும் அவ்விழாவில் மனதை பரிமாற்றியபடி சுந்தரகாந்தனும், சக்தரநாட்டு இளவரசியும் காதல் கொண்டனர். ஆனால் இது முற்றிலும் முரண்பட்டதாக அமைந்தது.
காரணம் சில காலங்களுக்கு முன்னர் மருதச்சோழனுக்கும் சக்தரனுக்கும் எதிர்பாராத விதமாகப் போர் நிகழ்ந்து, பகைமை உண்டாகியது. அப்பகைமையின் காரணமாக இன்றுவரை சோழனிடம் தோற்று, ஏற்பட்ட அவமானத்தைத் தீர்த்துக்கொள்ள சக்தரன் சந்தர்ப்பத்தை எதிர் பார்துகொண்டிருக்கிறான். இளவரசியும் சுந்தரகாந்தனும் இதை நன்கறிவர். அதனால் தான் தனது தந்தையிடம் தன் காதலைத் தெரியப்படுத்த முடியாத நிலைக்குட்பட்டாள் இளவரசி இளமஞ்சு.
ஆகச் செய்வதறியாது தன் காதலனிடத்தில் என்றும் சந்திக்கும் வைகை கரையில், இருவரும் சந்தித்த அவ்வேளையில், தனக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் சுயம்வரம் பற்றி அவனிடத்தில் கூறி புலம்பினாள். மேலும் சோழ நாட்டில் ஆடிப்பெருக்கு விழா நடக்கும் அந்நாளிலே, தனது சுயம்வரமும் நிகழும் என்பதை அவனிடத்தில் கூறினாள். அப்போது “நீ கலக்கம் கொள்ளாமல் இருப்பாயாக, எவ்வழியேனும் செய்து அழைத்துச் சென்று உன்னைத் திருமணம் புரிவேன். அன்றி உன் சுயம்வரத்தைத் தடுத்து தனியாக எதிர் நின்று போர் புரிந்து உயிர் துறப்பேன். நீ என்னை எதிர்பார்திருப்பாயக. நிச்சயம் உன்னைச் சேர்வேன்” என்று கூறி, அவள் கன்னத்தில் முத்தமிட்டான்.
இதையே சதுரன் அவையில் கவியாகப் படைத்தான். இவள் திகைப்பிற்குக் காரணம் அவர்கள் இருவருக்கு மட்டுமே தெரிந்த இந்த ரகசியத்தைச் சதுரன் அறிந்தது எப்படி? அப்போது சதுரன் யார்? என்பதாகும். சக்தரநாட்டு இளவரசியின் சுயம்வரத்திற்குப் பிற நாடுகள் அனைத்திலிருந்தும் இளவரசர்கள் வந்தபோதும், சோழநாட்டு இளவரசர்கள் அழைக்கப்படாததின் காரணமும், அதுமட்டுமன்றி ஆடிப்பெருக்கு எனும் அப்பெரும் விழாவில் சோழர்கள் நாட்டைவிட்டு வெளிவரமாட்டார்கள், என்று தெரிந்த சக்தரனும், இச்சுயம்வரத்தைத் திட்டமிட்டு நிகழ்த்துவதன் காரணமும் ஒன்றுதான். நிகழ்ந்த போரில், தோல்வியுற்ற சக்தரனுக்கு, ஒப்பந்தம் என்ற பேரில் மருதச்சோழன் இட்ட கட்டளைதான். அக்கட்டளையை நிறைவேற்ற சக்தரன் கொள்ளும் சஞ்சலமும், அவ்வாறு நிறைவேற்றப்படுவதன் விளைவால் ஏற்படும் சங்கடமும்தான் என்ன? மற்றும் சக்தரனுக்கும் மருதச்சோழனுக்கும் எக்காரணத்தால் போர் ஏற்பட்டு அப்படி நிறைவேற்றுவதற்கு விருப்பமில்லாத அளவிற்கு இருவருக்கும் இடையில் இடப்பட்ட ஒப்பந்தம் தான் என்ன? என்பதை ஏற்கனவே கதையில் நிகழ்ந்த, மற்றும் நமது அடுத்த பதிவில் நடக்கவிருக்கும் போரில் காண்போம். அதுவரை பொறுத்திருங்கள் அன்புடை நெஞ்சங்களே!
***
அறிந்துகொள்ளுங்கள்:
தண்டம்- முற்கால தமிழனின் படைகலன். தண்டாயுதம் என்றும் வழங்கப்படுகிறது.
திகிரி- வளரியையொத்தபடைக்கலன். சங்க காலத்திற்கும் முற்பட்ட காலந்தொட்டே தமிழரின் போர்ப்படையில் அங்கம் வகிக்கும் தற்காப்பு மற்றும் போர் கருவி.
நாராசம்- முற்காலத்தில் தண்டிக்கப் பயன்படுத்தப் பட்ட ஆயுதம். பழுக்க காய்ச்சிய உலோகக் கம்பி இதன் பொருளாகும்.
சோழாந்தி- சோழர்கள் கங்கையில் செலுத்திய கப்பல்களுக்கு இட்டப்பெயர்.