பகுதி-3

“கவியின் மடியில் தெளிவில் மயக்கம்…”


“சக்தர நாடு, இது ஓர் பேரழகு என்பார்
சக்தரன் அவை, இது ஓர் பிரமாண்டம் என்பார்” – காரணம்
அரசன், பொது அவை ஒன்றைக் கூட்டுகிறான் என்றால் நாடே கூடியிருக்கும். ஏட்டோடும் பாட்டோடும் அந்நாட்டுப் புலவர்கள் இதைப் புகழாமல் இருந்ததே இல்லை. ஆனால் அது பாண்டிய நாடாகவே பாடப்பெற்றது. போற்றப் பெற்றது. அரசன், அமைச்சர்கள், அருமைச்சான்றோர்கள்,  புலவர்பெருமக்கள், நடுநிலை வகிக்கும் நாட்டு மாந்தர்களோடு அன்றைய நாள் நாடு, ஆர்ப்பரிக்கும் தென்கடல் அலை போல சூழப்பெற்றிருந்தது. முதல் நாள் அரண்மனை அவைக்குள் பட்டத்து இளவரசர்களும், இராஜ குமாரர்களும் அவையோருக்கு தங்களை அறிமுகப்படுத்திக்கொண்டனர். இந்நாட்டின் இன்னுமொரு சிறப்பு விருந்தினர் மண்டபம். இது ரம்மியமான வேலைப்பாடுகளுடன், மிகவும் அழகாகக் கட்டமைக்கப்பட்டிருந்தது. இங்குதான் சதுரனுக்கும், மற்றவர்களைப் போல் அன்றைய இரவை கழிக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
சிந்தையில் பல யோசனைகளோடு தன் சிந்தனைக் கடலில் மூழ்கியவாறு, தான் வைத்திருந்த ஓலைச்சுவடிகளை, கையிலே மாற்றி மாற்றி அறையின் குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டிருந்தான். அவனது அன்றைய நாளில் ஆதவன் மறையவே இல்லை. மறுநாள் காலைப் பொழுது வரும் வரை, அவன் விழிகள் இமைத்தது இமைத்தவாறே உறங்காது கிடந்தன. 
அடுத்தநாள் அரண்மனைக்கு எதிரே ஓரிரு காத தூரத்தில் மிகப்பெரும் மேடையோடு கூடிய களம் ஒன்று கட்டமைக்கப்பட்டிருந்தது. அதைச் சுற்றியே அரசவையோரும், மற்றவர்களும், மக்களும் சூழ்ந்திருந்தனர். “வில்லோ சொல்லோ எதுவானாலும் சரி! அதில் எதுவொன்றை, என் மகளின் மனம் விரும்புகிறதோ, அது இன்று இவ்விடத்தில் மகத்துவம் பெரும்”என்ற அரசனின் வாக்கு அன்றைய நாயகர்களின் மனதில் இளவரசியை மனம் முடிக்க வேண்டும் என்ற ஆவலைத் தூண்டிவிட்டது. அன்று அரச சுயம்வர நிகழ்ச்சிக்கு அழைக்கப்பட்டிருந்தோரின் தேர்கள் களத்தின் முன் அணிவகுத்திருந்த தோற்றம் ஒரு முற்றுகைப் போலே காட்சிகொடுத்தது.
அவைக்களத்தை சூழ்ந்திருந்தவரின் முன், மலர்களைச் சூடிய மாது அவள், ராஜ வரவேற்போடும் “இளவரசி வருகிறார்” என்னும் அறிவிப்போடும் முரசொலி முழங்க,இரதத்திலிருந்து கீழிறங்கி, பாதம் பெயர்க்கும் சத்தம் கூட இல்லாமல் அரசர், அரசியார் மற்றும் இளவரசிக்காக அமைக்கப்பட்டிருந்த மேடையின் படிகளில் மெதுவாக ஏறி தனது இருக்கையின் முன் நின்று மக்களையும் மற்றவர்களையும் பார்த்து, தனது இருகரம் கூப்பி பொய்யான தன் புன்னகையோடு அவையோரை வணங்கி தன்னிடம் சாருகிறாள் சக்தரநாட்டு இளவரசி இளமஞ்சு. துவக்கத்திலேயே, நாடெங்கும், நீல வண்ணம் நிறமேறிய சக்கரம் பொறித்த கொடி, ஒரே நேரத்தில் பறக்கவிடப்பட்டது. இது விளக்குவதாவது, சுயம்வர நிகழ்ச்சி இனிதே துவங்கிவிட்டது, இனி சுயம்வர போட்டியாளராக அவையின் உள்ளே எவரும் நுழைய முடியாது என்பதாகும்.

முரசொலி முழங்கியதும், வரிசையில் முதலாவதாக அமர்ந்திருந்தவன் முத்துரதனின் மகன் இளந்திரையன். அவன் தனது திடத்தைக் காட்டும் பொருட்டு தனது உடைவாளை எடுத்துச் சுழற்றினான். அவனது மின்னல் வேகச் சுழற்சி பார்ப்போர் அனைவரையும் பரவசமூட்ட, உற்சாக குரலெழுப்பிக் கைதட்டி ரசிக்க வைத்தது. தான் வென்ற போர்களையும், தன்னிடம் தோற்ற எதிரிகளைத் தான் கழு மரத்தில் ஏற்றியதையும் பட்டியலிட்டு, கோன்குறுவழுதி எனும் மன்னன் எவராலும் தோற்கடிக்கப்படாதவன், ஆனால் அவனோ முதற்போரில் இளந்திரையனிடம் தோற்று, அங்கமெங்கும் நாராசத்தால் விழுப்புண்கள் வாங்கி, பின் மீண்டும் மூண்ட இரண்டாம் போரில் திரும்பவும் தோல்விகண்டு இளந்திரையன் நாராசத்தை அவன் காதிலே பாய்ச்சி கடுமையாகவும், மிகக் கொடூரமாகவும் கொன்றதையும் மேற்கோள் காட்டி கர்வப்பட்டுக்கொண்டான். இவன் சர்வமும் போற்றக்கூடிய வீரன்தான். ஆயினும், குணமில்லாதவன் மற்றும் நற்பண்பில்லாதவன் என்பது அவன் பேச்சிலே வெளிப்பட்டது.
இளந்திரையனுக்கு அடுத்தடுத்து ஒருவர்பின் ஒருவராக வாள், வேல், வில்லம்போடும், சொல்லோடும் அவையை மிரளச்செய்தனர். அவ்வரிசையில், “வெண்பா”வில் பாட்டமைத்து அதுவரை கேளாத பாரத பெருங்கவியாக ஒருவன் போற்றப்பட்டான். அவனோ சேர நாட்டின் ஒரு அங்கத்தை ஆள்பவன். அவன் பேர் கோப்பெருங்கோன்குட்டுவன் என்பதாகும். இவனது இடத்தில் கள்வர் கொட்டம் அடக்கப்பட்டு, அவர்கள் விரட்டியடிக்கப்பட்டதுடன் எஞ்சியோர் நாடுகடத்தப்பட்டனர். அதுவே அவனது வரலாறு கண்ட பெரும் சிறப்பு ஆகும்.
 பின்னர் இறுதியிலும் இல்லாமல் முதலிலும் இல்லாமல் இடையிலே அவைக்கு மத்தியில் தோன்றினான் சதுரன்.  அதுவரை அவன் சிந்தை சிந்தித்துக் கொண்டிருந்தது என்ன தெரியுமா? எதைச் செய்தால் இவ்விடத்தில் தான் வந்த காரியத்தை நடத்தி, வெற்றிகாண முடியும் என்பதாகும். அதற்கு விடை கிடைத்தது போல், சிறு புன்னகையுடன் கையில் தண்டத்தை எடுத்தான். அதில் வல்லவன் என்பது எடுத்தவன் தோரணையிலே தெரிந்தது. தண்டத்தைக் கையில் எடுத்து, தான் நின்ற இடத்திலிருந்து ஓரிரு அடிகள் பின்வாங்கி, அதை வேகமாகச் சுழற்றி, தரையிலே ஓங்கி அடித்தான். அதனால் எழுந்த அதிர்வலைகள், கொற்றவனின் தலைமேலே நின்ற வெண்கொற்றக்குடையைச் சற்று அதிர வைத்தது.  அடுத்தது தனது இன்னொரு படைக்கலனை கையில் எடுத்தான். இது யாரும் சிறப்புப் பெறாத படைக்கலன். இதில் தேர்ச்சி பெற்றிருந்தாலும் இதற்காக யாரும் போற்றப்பட்டதில்லை. ஆம் அதன் பெயர்தான் திகிரி. திகிரியை எடுத்து வேகமாகச் சுழற்றி, இமை மூடி திறக்கும் முன்னரே இலக்கை குறி வைத்துத் தாக்கி, பின் மீண்டும் அதை அவன் கைப்பற்றி இடையில் சொருகினான். இதில் இவனிடத்தில் தென்பட்ட இந்த நுணுக்கமும் திறமையும், வல்லமையும் அந்த சங்கமத்தையே சற்று சிலிர்க்க வைத்தது. அதோடு மட்டுமன்றி கலன் பற்றி வித்தைகள் செய்ததோடு நில்லாமல் கவிதொடுத்து செயலாற்ற எண்ணினான். ஆக இவன் தன் இடுப்பில், தான் அணிந்திருந்த, கச்சையிலே சொருகி வைத்திருந்த,“என்னவளும் யானும்” என்னும் தலைப்பில்    
அவன் குறுங்கவிதையாகப் படைத்த மடலொன்றை எடுத்தான், படித்தான், கவி பாடினான். கவி-பெண் எனும் பொருளில்,
“கவியின் மடியில் தெளிவில் மயக்கம்” என்று இரட்டுற மொழிதலாக துணைத் தலைப்பிட்டு எழுதப்பட்டிருந்த அக்கவியின் ஓரிடத்தில்….
“வைகறையின் நேரம் வைகைக்கரையின் ஓரம்
வைகையின் சாரல்!
பெண்ணிலவைக் கவியாய் சமைத்து,
வெண்ணிலவை விளக்காய் அமைத்து,
அவள் விரலைந்தும் அவன் தலை கோத,
அவள் மடி அவன் சாய்ந்திருந்தான்.
சாய்ந்திருந்த அவனோ அவள் கன்னத்தில் முத்தமிட,
சலனமற்ற அவ்-ஆறு அவள் நானத்தால் சற்றே சத்தமிட்டது.
ஊர் உறங்கும் அவ்வேளையில்-இவர்
இருவர் மட்டுமுறங்கா அந்நேரம் -அவளிடத்தில்
ஆடியில் காவிரி பெருகி வரும் அந்நாளில்
உன் கண்ணெதிரில் வந்துனைச் சேர்வேனடி
இனி அவை வந்தோன் உடன் நீ அவை கடப்பாய் என்றான்”- என்று அமைக்கப்பெற்றிருந்தது.
இவ்வரிகள் கேட்டதும் விழியிரண்டும் முழுதாய் திறந்து, வெற்று வரிகள் தன் நெஞ்சில், வேல் பாய்ச்சியது போல் பார்த்தாள். பெண்ணவளின் திகைப்பைக் கண்டவன், இதைத்தானே நானும் எதிர்பார்த்தேன் என்பது போல், புன்னகை செய்து வேண்டுமென்றே அவ்வரிகளை அவள் செவி சேரும்படி மீண்டும் மீண்டும் மும்முறை படித்தான். அதுவரை அவைக்களத்தை பாராத அவள் கயல்விழிகள் அங்கேயே நிலைபெற்றன. மெதுவாக அவள் விழியிரண்டும் இவன் பக்கம் சாய்ந்தன. இவளுக்கும் இக்கவியின் வரிகளுக்கும் ஆன சம்பந்தம் என்ன? என்பதுதான் இவளின் ஏக்கம், துக்கம், எதிர்பார்ப்போடு நாம் இதுவரை பயணித்த இக்கதையின் சாராம்சம் ஆகும். வாரீர்! இன்னும் ஒரு சுவாரசியமான எடுத்துக்காட்டு கதையொன்றும் உள்ளது,கேளீர்!
சக்தர நாட்டின் வடக்கே, கிழக்கே அல்லது வடகிழக்கே அமைந்ததுதான் சோழநாடு. இதை சக்தரநாட்டின் அண்டைநாடு என்றே சொல்லலாம். இந்த அகன்ற இத்தேசத்தை ஆள்பவன் திறம் கொண்ட சிவபக்தன். கிழக்கு கடலையே ஏரிபோல் ஆக்கி, கடலெங்கும் கப்பலை நிற்கச்செய்து, அக்கப்பலாலே கடலுக்கு கரைகாண்பித்தவன். தனது சோழாந்தியை கங்கையில் செலுத்தி, வடக்கு தெற்காக வலிமை காட்டி வாணிபம் செய்தவன். அவன் பேர்தான் மருதச்சோழன். இவனைக் கம்பலை தருவேந்தன் என்றும் அழைப்பார்கள். காரணம் தன் எதிரிகளுக்கு தன் படைபலத்தாலேயே நடுக்கம் தருபவன். மருதச்சோழனுக்கோ இரண்டு மகன்கள். மூத்தவன் சுந்தர காந்தன், இளையவன் சுந்தர செம்பியன்.
சுந்தர காந்தன் தனது இளம்பருவத்தில் கல்விக்காக சக்தரதேசத்தில் குருகுலவாசம் செய்தான். அந்நாளில் ஏற்பட்ட சந்திப்பில் அறிமுகமாகி, பின்னர் சோழர்களின் பெரு விழாவாம் ஆடிப்பெருக்கு எனும் அவ்விழாவில் மனதை பரிமாற்றியபடி சுந்தரகாந்தனும், சக்தரநாட்டு இளவரசியும் காதல் கொண்டனர். ஆனால் இது முற்றிலும் முரண்பட்டதாக அமைந்தது.
காரணம் சில காலங்களுக்கு முன்னர் மருதச்சோழனுக்கும் சக்தரனுக்கும் எதிர்பாராத விதமாகப் போர் நிகழ்ந்து, பகைமை உண்டாகியது. அப்பகைமையின் காரணமாக இன்றுவரை சோழனிடம் தோற்று, ஏற்பட்ட அவமானத்தைத் தீர்த்துக்கொள்ள சக்தரன் சந்தர்ப்பத்தை எதிர் பார்துகொண்டிருக்கிறான். இளவரசியும் சுந்தரகாந்தனும் இதை நன்கறிவர். அதனால் தான் தனது தந்தையிடம் தன் காதலைத் தெரியப்படுத்த முடியாத நிலைக்குட்பட்டாள் இளவரசி இளமஞ்சு.
ஆகச் செய்வதறியாது தன் காதலனிடத்தில் என்றும் சந்திக்கும் வைகை கரையில், இருவரும் சந்தித்த அவ்வேளையில், தனக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் சுயம்வரம் பற்றி அவனிடத்தில் கூறி புலம்பினாள். மேலும்  சோழ நாட்டில் ஆடிப்பெருக்கு விழா நடக்கும் அந்நாளிலே, தனது சுயம்வரமும் நிகழும் என்பதை அவனிடத்தில் கூறினாள். அப்போது “நீ கலக்கம் கொள்ளாமல் இருப்பாயாக, எவ்வழியேனும் செய்து அழைத்துச் சென்று உன்னைத் திருமணம் புரிவேன். அன்றி உன் சுயம்வரத்தைத் தடுத்து தனியாக எதிர் நின்று போர் புரிந்து உயிர் துறப்பேன். நீ என்னை எதிர்பார்திருப்பாயக. நிச்சயம் உன்னைச் சேர்வேன்” என்று கூறி, அவள் கன்னத்தில் முத்தமிட்டான்.
இதையே சதுரன் அவையில் கவியாகப் படைத்தான். இவள் திகைப்பிற்குக் காரணம் அவர்கள் இருவருக்கு மட்டுமே தெரிந்த இந்த ரகசியத்தைச் சதுரன் அறிந்தது எப்படி? அப்போது சதுரன் யார்? என்பதாகும். சக்தரநாட்டு இளவரசியின் சுயம்வரத்திற்குப் பிற நாடுகள் அனைத்திலிருந்தும் இளவரசர்கள் வந்தபோதும், சோழநாட்டு இளவரசர்கள் அழைக்கப்படாததின் காரணமும், அதுமட்டுமன்றி ஆடிப்பெருக்கு எனும் அப்பெரும் விழாவில் சோழர்கள் நாட்டைவிட்டு வெளிவரமாட்டார்கள், என்று தெரிந்த சக்தரனும், இச்சுயம்வரத்தைத் திட்டமிட்டு நிகழ்த்துவதன் காரணமும் ஒன்றுதான். நிகழ்ந்த போரில், தோல்வியுற்ற சக்தரனுக்கு, ஒப்பந்தம் என்ற பேரில் மருதச்சோழன் இட்ட கட்டளைதான். அக்கட்டளையை நிறைவேற்ற சக்தரன் கொள்ளும் சஞ்சலமும், அவ்வாறு நிறைவேற்றப்படுவதன் விளைவால் ஏற்படும் சங்கடமும்தான் என்ன? மற்றும் சக்தரனுக்கும் மருதச்சோழனுக்கும் எக்காரணத்தால் போர் ஏற்பட்டு அப்படி நிறைவேற்றுவதற்கு விருப்பமில்லாத அளவிற்கு இருவருக்கும் இடையில் இடப்பட்ட ஒப்பந்தம் தான் என்ன? என்பதை ஏற்கனவே கதையில் நிகழ்ந்த, மற்றும் நமது பதிவில் நடக்கவிருக்கும் போரில் காண்போம். அதுவரை பொறுத்திருங்கள் அன்புடை நெஞ்சங்களே!


***

அறிந்துகொள்ளுங்கள்:
தண்டம்- முற்கால தமிழனின் படைகலன். தண்டாயுதம் என்றும் வழங்கப்படுகிறது.
திகிரி- வளரியையொத்தபடைக்கலன். சங்க காலத்திற்கும் முற்பட்ட காலந்தொட்டே தமிழரின் போர்ப்படையில் அங்கம் வகிக்கும் தற்காப்பு மற்றும் போர் கருவி.
நாராசம்- முற்காலத்தில் தண்டிக்கப் பயன்படுத்தப் பட்ட ஆயுதம்பழுக்க காய்ச்சிய உலோகக் கம்பி இதன் பொருளாகும்.
சோழாந்தி- சோழர்கள் கங்கையில் செலுத்திய கப்பல்களுக்கு இட்டப்பெயர்.






                                                                                              

Comments

Popular Posts

CHAPTER 3

பகுதி-1