பகுதி-2

 "வடுக நாடு" 

வெந்தழல் வேந்தன் செந்தழல் சேரன், இரும்பொறையானின் அசைக்க முடியா சேர நாட்டைக் காத்து நின்றது அந்நாட்டு மாமலைகளே! அங்கிருந்த குடகெனும் மலையினிடத்து தோன்றி, சோழ தேசத்தின் மண்ணில், அக்கரைக்கும் இக்கரைக்கும், அகன்று விரிந்து, காவிரியெனும் பெயர் கொண்டு, மெய் சிலிர்க்கும் தனது பரந்த பிரவாகத்தால், காணுமிடமெல்லாம் சோலைகள் தோன்றச் செய்து, வேங்கை கொடி விரிந்து கிடக்கும்  அந்தச் சோழர் தேசத்தினை, “சோழ தேசம் சோறுடைத்து” எனும் அந்நாமம் சூடச்செய்த இந்தப் பொன்னி நதி, இறுதியில் தனது இட வலம் குறுகி, வங்கக் கடலில் இது வந்து புகும் பட்டினம்தான் “காவிரி புகும் பட்டினம்”. அன்றும் சரி என்றும் சரி, இது சோழனின் விசாகப்பட்டினத்திற்கு முன் மூத்த துறைமுக நகரமாகும். இருந்த அத்துணை வளங்களும், பண்ட மாற்றத்தோடு பகிர்ந்தளிக்கப்பட்டது என்றால், அது இத்துறைமுக நகரத்தில்தான்!

  தெற்கிலிருந்து வடக்கு நோக்கி விரைந்த, வேள்விச்சனின் கப்பல், இந்தக் காவிரி புகும் பட்டினத்தில் வந்து கரை சேர்ந்தது. வேள்விச்சனால் பிறப்பிக்கப்பட்ட கட்டளையால், வணிகன் மகிழன் சோழ அவை நோக்கி தூதாக செலுத்தப்படுகிறான். வேள்விச்சனின் அடுத்த ஆணை, பொருட்கள் சென்று சேர வேண்டிய இடத்திற்கு சென்று  சேரவும், இனி ஏற்றுமதி செய்யவேண்டிய பொருட்களை ஏற்றுமதி செய்யவும், இவையனைத்தையும் பற்றிய தகவல்கள் யாவும், வணிகர் மையத்தில் சேர்க்கப்பட வேண்டும், என்று மற்றவர்களைத் துரிதமாக இயக்குகிறது. அதன் பின் வேள்விச்சனின் பயணம், வடுகநாடு நோக்கி அமைகிறது. தனது குறும்படையுடன், சைலம் என்ற தேசத்தின் வழியாக, சேரவர் ஆயன் (அரண்) எனும் அம்மலைத் தொடர் கடந்து, வடுக ராஜ்ஜியத்தின் எல்லையைத் தொடுகிறான். அவன் அவ்விடம் சேரும் முன்னரே வடுக தேச தென்றல் தன்னை வருடுவதை, அவன் மேனி உணர்கிறது. 

 பசுமை போர்வை போர்த்திய வடுக ராஜ்ஜியம், இயற்கையோடு இயைந்த ஓர் அழகு. அதன் தொன்மை, நெடுங்காலத்து சேர்ந்தது இல்லையெனினும், அங்கு வாழ்ந்த மாந்தர்கள், குறைவற்ற வாழ்வு வாழ்ந்திருந்தனர். விண்ணைத்தொடும் மாமலைகளும், அங்கு மனந்தொடும் மலைச்சாரலுமாக, எண்ணத்திற்குச் சற்று இதமளிக்குமாறு இருந்தது. எழில் கொஞ்சும் இயற்கைதனை எழுதாதார் யாருமில்லை! என்று யோசித்தவனாக, வேள்விச்சன் காணக்கிடைத்ததையெல்லாம் கண்டு களித்திருந்தான். பயணத்தை நெடுந்தொலைவு தொடர்ந்தான். என்றுமே மனமயங்கும் விச்சனவன், போகும் வழியில், அன்று மதிமயங்கி நின்றிருந்தான். அவன் மனம் பறிபோனதோ ஓர் பேரெழில் பெண்பாவையிடம். அவள் களைப்பால் அயர்ந்திருந்தாள். மரங்கள் இலைகள் கொண்டு, கதிரொளி இம்மண்ணில் விழுவதை இடைமறித்தாலும், அந்த மாலைப்பொழுதில், காட்டைத்துளைத்துக்கொண்டு அவ்வொளி மங்கையவள் மேல் விழுந்தது. காணகக்குயிலின் காணத்தினோடு, அப்பெண்கவியின் காட்சியால், காற்றோடு காற்றாக மிதந்தவன், காரிகையவள் கண்ணத்தில், கதிரொளிப் பட்டு, சற்று கண்கள் சுருக்கி, பெண்ணவள் முகம் சுழிக்கக்கண்டான். இதைக்கண்டு உடல் சிலிர்த்து, ஓர் பெருமூச்சோடு, என்னென்னவோ எண்ணிமுடித்த இவனுள், அலர்ந்த இமைக்கா நொடிகள் அதுவே ஆகும். மெல்ல மெல்ல நெருங்கி, புரவியின் துணைகொண்டு அவளுக்கு நிழல் நிறுத்தி, ஒளியினை வழிமறைக்க முயன்றான். யாரோ அருகில் வருவதை உணர்ந்தவள், சற்றே சுதாரித்துக்கொண்டாள். சட்டென்று திரும்பி, கட்டுடல் மேனியில் கலைஞனும் இல்லாமல், வீரனும் இல்லாமல், இளைஞன் ஒருவன் தன்னை நெருங்கி வருவதைக்கண்டு, சிறு கலக்கம் கொண்டவள், அவனுக்குப் பின்னால் படைவீரர்களும் அணிவகுத்திருந்தது பார்த்து சற்று  அச்சமும் தொடுத்திருந்தவள், தன் விழி இரண்டில் அவனை ஒழித்து வைத்தாள். அவளின் தயக்கம் உணர்ந்தவன், தன்னைமறந்து, தான் மயங்கிய நிலை மறைத்து, பயணத்தைத் தொடர்ந்தான். இதுவரை குயிலின் கீதமும், நீரின் சலனமும் கேட்டு வந்த அவன் செவிகளில், மானுடர் சலசலப்பு விழுந்தது. இது நடந்தது எல்லாம் ஓர் நகரத்தின் எல்லைத்துவக்கத்தில் தான். ஆமாம்! இதுதான் அந்நாட்டின் எல்லைத்துவக்கம். இதையும் அவன் நன்கு அறிவான். அங்கிருந்த சாலைகளுக்குளேதான், விருட்டென்று விரைந்தது அவனது பரி படை. சுற்றிலும் மலைகளாக, மத்தியில் அமைந்திருந்த கோட்டைக்கு, அம்மலைகளே அரணும் அணிகலனுமாகத் தோன்றியது. 

 அந்த அரண்மனையின் பிரதான வழியைத் தவிர்த்து, அமைச்சர்களும் முக்கிய பிரதிநிதிகளும் செல்லும் வழியாகக் கோட்டையினுள் நுழைந்தான். உள்ளிருந்த மந்திரிகளுள் சிலர் விரைந்து வந்து வரவேற்று, அவனை உபசரிக்க, பணியாளர்களுக்கும், சேவகர்களுக்கும், ஆணையிட்ட கனமே அவர்கள் விரைந்தனர். அரண்மனையில், ஒரு அறையில் ஓய்வு கொண்டிருந்த அவனிடம் “ வணக்கம் வேள்விச்சரே! அரசியுடனான சந்திப்பிற்காக கலந்தாய்வு மண்டபம் நோக்கி, தாங்கள் தற்போது செல்லலாம்” என்று சேவகனிடமிருந்து தகவல் வந்ததும், அவ்விடம் நோக்கிப் புறப்பட்டான் வேள்விச்சன். அவையில் காத்திருந்த அடுத்த சில நாழிகைகளில் “இராணி அவை நோக்கி வருகிறார்” என்னும் பேரறிவிப்போடு, முன்னும் பின்னும் சேவகர் கூட்டம் சூழ்ந்து, கம்பீர நடைபோட்டு, உடைவாளும் உடையவளாக, பிதிநிதிகளின் கலந்தாய்வு மண்டபத்தில் பிரவேசிக்கிறாள் வடுகநாடாளும் அரசி, இராணி நற்சோனை! அதன் பின், தான் அவ்விடம் வந்ததன் காரணமும், நடக்க விருக்கும் நிகழ்வுகளும், தங்களால் செய்யப்படவேண்டிய காரியமும், தெள்ளத்தெளிவாக விளக்குகிறான் வேள்விச்சன். குழப்பமும் பதற்றமும் கலந்து, எதற்கு இசைவதென்றே தெரியாமல், தடுமாற்றத்தில் அவன் முகம் நோக்குகிறாள் அரசி நற்சோனை! இதைச்சற்று கவனித்தவனாக எப்படியாவது தனக்கு சாதகமான தீர்வையே பெற வேண்டும் என்ற உறுதியில், அரசியிடம் “அரசியாரின் உத்தரவு இதற்குச் சாதகமாக அமையும் என்று நம்புகிறேன்! எனது எண்ணம் சரிதானே?” என்று வினாவினான் வணிகன் வேள்விச்சன். மறுகனம் அரசி நற்சோனை “இந்தத் தருணம்தான் என் வாழ்விலேயே எதைச் சார்ந்து முடிவெடுப்பது என்று ஆழ்ந்த குழப்பத்தில் என்னை ஆழ்த்துகிறது… இருபத்து ஐந்து வருடங்களுக்கும் முன்னர், வீரக்கணைகள் வந்து மார்பைப் பிளந்து, செந்நீர் சிதற, உயிர் ஊசலாடும் போதும், தம் மணவாளனின் பிராணனை கையில் பிடித்துக்கொள்ள முடியாமல், மணாளனையும் இழந்து, மக்களையும் இழந்து, களத்தில் விதவைகோலம் பூண்டு நின்ற மங்கைக் கூட்டத்தில், நானும் ஒருவளாக தோன்றி, இனி இவ்வாழ்க்கையென்னும் இந்த ஒருவழிப்பாதையில்தான் என் பயணம் என்று நான் உணர்ந்து, அவ்வாழ்க்கையை தொடர்ந்த தருணத்தில், நிமலினி என் மகளாகிய நினைவு என்முன் வந்து போகின்றது…” என்று நற்சோனை வேள்விச்சனிடத்தில் கூறும்போது, கனத்த  அவள் விழிகள் கண்ணீர் சுமந்தன. 

 பின்னர் “என்றோ ஒருநாள்! என்று,  நான் எதிர்நோக்கிய இந்த வினா, உன் வழியில், இவ்விடத்தில் இன்று ஒலிக்கிறது வேள்விச்சா! அது போகட்டும், இனி நடக்கவிருக்கும் சம்பவங்களுக்கு, நிமலினி இசைவாள் என்பது என்ன நிச்சயம்? காரணம், இதுவரை அவளே என் மகள்! நானே அவள் தாய்! அது மட்டுமல்லாது இப்பொழுதுவரை இதை எதையும் அவள் அறியாதவளாவாள்.  அப்படியே அறிந்தாலும் உடனடியாக அவள் ஒப்புதல் தருவாள் என்பது, என்னைப் பொருத்தவரை முற்றிலும் அசாத்தியம். கடமை என்று நான் சம்மதித்தாலும், என் தாய்மை இதை ஏற்கப் போவதில்லை. அதைச் சமாளிக்கும் உபயமும் நான் அறியேன்” என்று அவள் கூற, அதற்கு வேள்விச்சன் “மாகாரணியார் அவர்களே! எது நடந்தாலும் நடக்காவிடிலும் தாங்களே நிமலினியின் தாய் என்பதும், அவள்தான் தங்களின் மகள் என்பதும் யாராலும் மாற்றிட முடியாத உண்மை… மங்கையாகப் பிறந்தவள் மறுவீடு செல்வது முறை! அதுவே தமிழ் மறையும் ஆகும். ஆக, நிலமையை சரிக்கட்ட இதை விட வேறு வழி எதுவும் இல்லை என்பதும் சத்தியம். இராணியவர்கள் எதையும் மறந்து விடக்கூடாது என்பதற்காக, ஒன்றை மட்டும் நினைவுக்குக் கொணர்கிறேன். அதே இருபத்து ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர், சுப்பய்யன் என்பவரின் நாமம் தங்கள் செவிகளில் விழும்போது, அவர் தங்களிடம் பெற்ற ஒரு ஒப்பற்ற பரிசும் தங்கள் விழிமுன் வரும்”, என்று வேள்விச்சன் கூறியபடி நற்சோனை முகம் நோக்குகையில், பசுவினை காண என்னும் கன்று, ஒரு பக்கம் இருந்து, தன் தாயை அழைக்கும் போது, மறுபக்கமிருந்து அக்கன்றினை நோக்கிக் கதறும் (ஒலி மரபு) அந்தப் பசுவினைப்போல அவளது தாய்மையின் ஏக்கமும், எதிர்பார்க்கும் தாகமும் தாங்கி, ஏதோ ஒரு எண்ணத்தில், தன்னை  முழுமையாக நுழைத்திருந்தவளை, அரசியாரே நான் சொல்வது சரிதானே! என்று கூறி சுயநினைவுக்குக் கொண்டுவந்தான். 

 கனவிலிருந்து களைந்தவள், சேவகரை அழைத்து தூதினை ஆணையாக, இளவரசி நிமலினிக்கு ஏவினாள்.

"அரசியார் மற்றும் வேள்விச்சனுடனான, அவசர சந்திப்பிற்கு கலந்தாய்வு மண்டபம் வருக.  
இது அறிவிப்பு இல்லை! கட்டாய அழைப்பு!"

என்று, இளவரசியின் அறை நோக்கிய, அந்த துண்டுச்செய்தி அமைக்கப்பட்டிருந்தது...

Comments

Popular Posts

CHAPTER 3

பகுதி-3

பகுதி-1