பகுதி-1

அவன் வருவானா…?


நாம் செய்யப்போகும் காரியம் சரியா? தவறா? என்று தெரியவில்லை! ஆனால் அது இந்த இராஜ்ஜியத்திற்கு நல்லதாகத்தான் இருக்கப்போகிறது! “ஆமாம் அதுவும் சரிதான், இருப்பினும் அதன் தீவிரத்தையும், கடினத்தையும் நீ நன்கறிவாய் என்று நம்புகிறேன், சதுரா இவ்வாறு இவர்கள் உரையாடிக் கொண்டிருக்க,, அவ்வறையின் கதவு தட்டப்படுகிறது. அப்போது, தாழிட்ட கதவைச் சதுரன் திறந்து பார்க்கையில், “வணக்கம் சதுரரே! இடையூறுக்கு மன்னியுங்கள். வேள்விச்சனின் சோழ தேசம் நோக்கிய பயணத்திற்கு, அனைத்தும் தயாராகிய நிலையில் அவரை எதிர்நோக்கிக் காத்திருக்கின்றன, ஏற்கனவே சற்று கால தாமதமாகியும் உள்ளது என்றான் அங்குவந்த காவலன். “சரி, சந்திக்க வேண்டிய இடத்தில், இனி சந்திப்போம் சதுரா! நான் வருகிறேன்என்று கூறியபடி சதுரனை நோக்கிய அவன் பார்வை, தங்களால் செய்யப்போகும் செயலின் தீவிரத்தை ஒளிர்விட்டது. பின்னர் அவ்விடம் விட்டு சற்று வேகமாக நடந்து, புரவியின் மீதேறி அமர்ந்தபடிகவனம் என்று கூறி, முத்தூர் துறைமுகம் நோக்கிப் புறப்பட்டான், வேள்விச்சன்.
இரவும் பகலும் ஒன்றுபோலத்தோன்றும் அம் மாநகரின் இரவு சந்தைகளில், பொன், பொருள், அணிமணிகள் என அத்துணையையும் வாங்கவும் விற்கவும் அலைமோதும் மக்கள் வெள்ளத்திற்கும், கடல் கடந்து வந்த அயல் நாட்டவரின் கடல்வணிகத்திற்கும் மையமாக அமைந்ததுதான், இந்த முத்தூர் துறைமுகம். இங்கு விண்ணின் விண்மீன்களை அள்ளி மண்ணில் குவித்தாற் போல, குவியல் குவியலாய் கிடக்கும் முத்துக்கள், நிலவின் ஒளியில் ஜொலித்துக்கொண்டிருந்தன. “இந்த தூங்கா நகரத்திற்குத்தான் எத்துணை சிறப்பு! அதுவும் இந்தப் பாண்டிய முத்துக்களுக்கு என்று வேள்விச்சன் வியந்து பார்த்திருக்க “ஆமாம் விச்சரே! இருக்காமல் எப்படி? இருப்பினும் இது உமக்குப் பெரிய ஆச்சரியமாக இருப்பதுதான் எனக்கு மிகப்பெரும் அதிசயமாக இருக்கிறது என்ற குரல் அருகிலிருந்து ஒலித்தது கண்டு வலப்புறம் திரும்பினான். அது வேறுயாருமில்லை சோழ வணிகன் மகிழன். இருவரும் இணைந்து கடலை நோக்கி படகில் சென்று கொண்டிருந்தனர். நெடுந்தொலைவில் அந்த நீலப்பெருங்கடலில் மிதக்கும் மாமதில் போன்று ஓர் இராட்சத உருவம், அதற்குத் தான் எத்துணை அலங்கரிப்பு! பாய்மரத்தைத் திசை திருப்பி, அதைச் சரியாக செலுத்துவதற்கும், வேலைத்தொழில் செய்பவர்களோடு மொத்தம் 800க்கும் மேற்பட்ட ஆட்களைக் கொண்ட ஒரு குறும்படையும், வானுயர்ந்த கொடியில் அரிமா இலட்சினையும், கண்டதும் இது ஓர் வணிகம் சார்ந்த கப்பல் என்று சொல்லுமாறு, செந்தூரான் துணை என்ற வாசகம் பொறிக்கப்பட்டிருந்த அம் மாமதில் வேறெதுவும் இல்லை, அதுதான் வணிகன் வேள்விச்சனின் தெற்கு வணிகக்கப்பல். ஆம் வேள்விச்சன் எனும் இவன், கடல்கடந்து சென்று உலகை பவனி வருகின்ற ஓர் வணிகனாவான். இது போன்று திசைக்கொன்றாக இவனது கப்பல்களின் எண்ணிக்கை நான்கு. ஆனால் வேள்விச்சனைத்தவிர இதைப்பற்றி நன்கறிந்தவர் வேறு யாரும் இல்லை. தெற்கில் கபடாபுரமும், வடக்கில் விக்ஷர்ன பட்டினத்தோடு, தொன்மை மிக்க காவிரிபுகும் பட்டினமும், மேற்கில் சேர வேந்தின் கொற்கை துறைமுகமும், கிழக்கில் பலத்தீவுத்துறைமுகங்கள் என பல்வேறு இடங்களில் இவனது கப்பல்கள் உலாவிவந்திருந்தன. வேற்று நாட்டவரின் கப்பல்கள் இதன் முன் சிறியதெனத் தோன்றின. இருப்பினும் சில வணிகக் குழுமங்கள் இவனுக்குச் சளைத்தவையாக இல்லை. ஆயினும் அரசுகள் யாவற்றிடமும் கொடியுரிமைப்பெற்று, வணிகத்தில் முழு சுதந்திரம் கொண்டிருந்ததுதான் இவனது அகிலம் போற்றும் சிறப்பென இருந்தது. மகிழனுடன் வேள்விச்சன் அம் மாபெரும் கப்பலில் ஏறி, வடக்கு நோக்கி கப்பலை செலுத்த ஆணையிடுகிறான். ஆணைக்கிணங்க அடுத்த கனமே கப்பல் வெகுண்டெழுகிறது.
மறுபுறம் கபடாபுரத்தின் அரண்மனையில், ஷக்தரம் நோக்கிப் பயணிக்க, தன்னை தயார்படுத்திக் கொண்டிருக்கிறார் சதுரன். பின் 350 படைவீரர்களும், முத்துத்தேர்களுமாக விரிசடை பாண்டிய தேசத்திலிருந்து வடக்கு நோக்கி, மேருமலைத் தொடர்ச்சிகளைக் கடந்து, ஷக்தரம் நோக்கிப் பயணிக்கிறார். ஆயுத்த என்ற இடத்திலிருந்து ஷக்தரா இராஜ்ஜியம் துவங்குகிறது. இந்நாடு இராஜன் ஷக்தரனுடையது. இது அகன்று விரிந்த தேசமாக காணப்பட்டது. குறிப்பிட்டுச் சொல்லப்போனால் அது சேர, சோழ, பாண்டிய இராஜ்ஜியங்களுக்கு மையமாகவே இருந்தது. இராஜன் சுயாட்சி செய்யும் உரிமையில் இருந்தாலும் அவன் முடியுடை வேந்தர்களுள் முத்துடைத்தோர், பாண்டியருக்குக் கீழ்தான் ஆட்சி செலுத்தி வந்திருந்தான். இந்நாடு செல்வச் செழிப்பில் மற்ற நாடுகளுக்கு இணையாகவும், போர்ப்படைகளில் அவர்களைப் போன்றே, அனைத்து அணிகளும், மற்ற படை அமைப்புகளும் கொண்டு, தென்னவர்களுக்கு ஈடாக வலிமையும், பெருமையும் பெற்றிருந்தது. இதனால்தான் என்னவோ தன்னை மீறி, எப்படையையும் வீழ்த்தும் தைரியத்தையும் கர்வத்தையும் தன் தலைக்கு மேல் மணிமுடியாக்கி இருந்தான் இராஜன் ஷக்தரன். இங்கு ஆயக்கலைகள் அத்துணையும் வெகுச் சிறப்புற்று, குருகுலங்கள் தழைத்தோங்கி அவை எண்ணிக்கையற்றுக் காணப்பட்டது. அதனால் தேசங்கள் யாவற்றிலுமிருந்து மக்கள் இங்கு வந்து குருகுல வாசம் செய்தனர். இதுவே இந்தப் பூமியை ஞானதேசம் என்ற அடைமொழிக்கு ஏற்புடையதாக்கியது. மற்றவர் இந்த நாட்டின் கட்டிடக்கலையை கண்டு மகிழ்ந்து, அதன் வல்லுநர்களை எண்ணி வியக்கும் அளவுக்கு, இங்குக் காணும் கட்டிடங்கள் பற்பல நுணுக்கங்களுடன் தோன்றி நின்றன. ஒழுங்கான சீரமைப்பில் அமைந்திருந்த வீதிகள் ஒவ்வொன்றும் நீண்டவையாக அமையப்பெற்றிருந்தன. இந்த நீண்ட வீதிகள் ஒரு சக்கரத்தின் ஆரங்களாக அமைக்கப்பட்டிருந்தன. சக்கரத்தின் விளிம்பில் மதில்கள் அதன் மையத்தைக் காத்து நின்றன. இது மூன்றடுக்கு பாதுகாப்பில் நான்கு திசையையும் கவனித்து அரண் செய்தது. இந்தச் சுழலா சக்கரத்தின் அச்சாணிதான் இராஜன் ஷக்தரனின் கோட்டை. அரசனவன் ஆட்சிதனை திறம்பட செய்தான். அதனால் நாட்டு மாந்தர் நிம்மதியில் திளைத்திருந்தனர். மன்னன் மன நிறைவு கொண்டிருந்தான். இந்த வீதிகளில்தான் சதுரனின் முத்துத்தேர்கள் விரைந்தன. அவ்வழியில், பார்த்த விழி பார்த்தபடி, பார்வை மாறாது, சொக்கி நிற்க மயக்கம் தரும் பருவ நங்கையர்களின் உலாவலும், வாசலில் நீர் தெளித்து வண்ணக்கோலங்கள் இடப்பட்டு, வீதிகள் யாவும்  விழாக்கோலம் பூண்டு காணப்பட்ட அந்த அழகு, அயலாரை அசந்து போகும்படி செய்திருந்தது. இதைக்கண்டு சற்றே புன்சிரிப்பு கொண்ட சதுரன், விரைவாகத் தேரை செலுத்தி அரண்மணைக்கு வந்து சேர்ந்தான்.
அரண்மணையில் உள்ள ஓரிடத்தில், இராட்சத கதவுகள் இரண்டு திறக்கப்பட்டன. அகன்ற, ஒரு பிரம்மாண்ட தோற்றம், அந்த அறைக்குள் வேறு தேசத்து மன்னர்களும், பட்டத்து இளவரசர்களும், சில முக்கிய பிரதிநிதிகளுமாக, ஆன்றோர் சான்றோர் பெருமக்களோடு, அவ்விடம் நிரம்பப்பெற்றிருந்தது கண்டு,  சதுரனின் ஒரு புருவம் தானாக  உயர்ந்து வியந்த, தன் வியப்பை, தனக்கே உரித்தான பாணியில் ஒருவரும் அறியாது, அக்கனமே அதை மறைத்தான். அவ்விடம்தான் ஷக்தரனின் மகள் இளமஞ்சுவின் சுயம்வரம் நடக்கும் அவை. ஆம் அந்தப் பேரவைக்குள் தான் நுழைந்தான் சதுரன். நுழைவாயிலுக்கு எதிராக அமைக்கப்பட்டிருந்த ஆசனத்தில், கம்பீரமாக அமர்ந்திருந்தவனின் இடது புறம், மங்கையொருவளும் அமர்ந்திருந்த அந்தத் தோற்றமே சொன்னது, அதுதான் இராஜன் ஷக்தரன் என்றும், அருகில் இருந்தவர் மகாராணியார் என்றும். அரியனையே அவன் நாட்டின் மிகச்சரியான மையம். அதுவே அச்சாணியும் கூட. அந்தச் சிம்மாசனத்தின் நேர் எதிரில், முதல் தளத்தில் அத்தாணி மண்டபம் அமைக்கப்பட்டிருந்தது. உள்ளே நுழைந்த அவன், அவையோர் அனைவரையும் விட, மிக இளையவனாகத் தோன்ற, அரியணையில் வீற்றிருந்தவன் சற்றே தலை சாய்த்து, முட்டியில் முழங்கையை நிறுத்தி, அதைத் தாடைக்கு முட்டுக்கொடுத்து, விரலசைவில், தன் அமைச்சனிடம் ஏதோ ஒன்றை வினாவினான். பின் அங்கு வந்த இளைஞன் சதுரனிடம் “தாம் இவ்விடம் அறிந்துதான் வந்தீரோ என்றான். மறு கனமே சதுரனும் “ஆம்! வைகை என்றோர் நதியின் மடியினிடத்து கொஞ்சி மகிழும் ராஜ்ஜியம் ஒன்றும், அதன் மகாராஜர் இராஜ ஷக்தரன் என்றும், அவர் தமிழ் மண்ணில் மூவேந்தருக்கும் இணையானவர் என்றும், அது தாம்தான் என்றும், யமக்கு அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது அரசே! மகாரஜர் மற்றும் மகாராணியையும் பணிந்து, அவை சேர்ந்தோர் அனைவரையும் வணங்குகிறேன் என்றான்  ” இவ்வார்த்தைகள் கேட்ட இராஜன், புன்னகையில் கர்ஜித்ததையும் கடைக்கண்ணில் கண்டுகொண்ட சதுரன், மேலும்தென்னுலகில் முத்துக்கென்று ஓர் சிறப்பு, முத்துக்கு மட்டுமன்றி எதிர்வரும் இப்படைக்கண்டு, எப்படையும் நடு நடுங்கும் ஐம்படை சிறப்பும், அதனோடு மிருகங்கள் கொண்ட குறும்படையும் கொண்டு, 49 நாடுகளையும் ஒரே தலைமையின் கீழ் தென்புலத்தை  ஆட்சி செய்து, அகத்தியன் முதற்கொண்டு அநேக புலவர்களோடு, கொடுங்கடல் கொன்றாலும், சங்கம் இரண்டும் செய்து, என்றுமே மொழிக்கு முதவல்வனாக இருக்கும் தென்னவரையும், அவர் வழி வந்தவனும், கபடாபுரம் எனும் அந்நகரை தலைநகராக்கி தென்புலம் ஆள்வோனுமாகிய, வேந்தன் கடம்ப பாண்டியனையும், அவர் பெயரன் இரண்டாம் யுவனையும் யாவரும் அறிவீர்கள் என யான் நம்பிக்கைக்கொள்கிறேன்! எம் அரசனின் ஆணைக்கிணங்க இவ்வவையோன் உம் அழைப்பிற்கிணங்க, யாம் இரண்டாம் யுவனின் பிரதிநிதியாக இங்குப் பிரவேசித்துள்ளோம் என்று முகவரித் தந்து, மீன் சின்னம் பொறித்த நீல வண்ணக்கொடியை உயர்த்திப் பிடித்தான். அவையோ சற்று சலசலத்துக் கொண்டது, அடுத்த கனமே! அவன் அரசனின் அரியாசனத்திற்கு கீழமைந்த, மன்னர்களுக்கான ஆசனத்தில் அமர்த்தப்பட்டான். அதுவரை அவையோரை நோக்கியிருந்த அவனது பார்வை சிறிது தட்டுத் தடுமாறி அத்தாணிமண்டபத்தில் விழுந்தது.
அங்கு, தேன்பருகி மகரந்தம் பூசிக்கொள்ளும் வண்டுகள் எல்லாம் வந்து, ஒரு மலரை வட்டமிடும் அந்தப் பூ மலரைப்போல, ஒரு மாதுவின் தோற்றம்! வெண்புஷ்பங்கள் கொண்டு மங்கையவள் கூந்தல் அலங்கரித்துக் காணும் ஆடவர் கண் மயங்கும் ஒப்பனையில், காணப்பட்டாள் அந்த கார்க்குழலி! பார்ததுமே கண்டுகொண்டான், அவள்தான் இளவரசி இளமஞ்சு என்று. சுயம்வரம் வந்த ஆடவரின் எண்ணமெலாம், அவள் பெண்ணழகைக் காண ஏங்கி இருக்க, அவள் நினைவெல்லாம் வேறெங்கோ அலை பாய்ந்திருந்தது. பலுக்கல் படர்ந்த பூங்கொடிபோல் தூணில் சாய்ந்திருந்தாள் தன்னை சரமாறியாக தாக்கும் குழப்பத்தோடு! மையிட்ட அவள் கயல்விழிகள், பொய்யற்று சொன்னது, தான் விரும்பா அம் மணக்கோலத்தை! தெளிர் நீரில் பட்டுத் தெறிக்கும் வெண்ணிலவின் வெள்ளொளிபோல, ஜாடையாய் அவள் முகம் சொன்னது, தன்னை விடுவிக்க அவன் வருவானா எனும் ஏக்கத்தை…!

Comments

Popular Posts

CHAPTER 3

பகுதி-3